கோவில்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
கோவில்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை கிராமத்தில் உள்ள அழகு சுப்பிரமணியர் கோவிலில் காலபைரவாஷ்டமி பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சொர்ணபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி 108 சங்கு, 27 கலசம் வைத்து பூஜை தொடங்கியது. விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத அழகு சுப்பிரமணியர், சோமசுந்தரர் மீனாட்சி, மாரியம்மன், துர்க்கை, அய்யப்பன், அம்பிகை, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத யாகம் வளர்த்து, பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர் சொர்ண பைரவருக்கு 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புதிய நாணயங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் பக்தர்களின் பொருளுதவியால் சொர்ண பைரவருக்கு மரத்தாலான நாய் வாகனம் அர்ப்பணிக்கப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது. மேலும் அதில் பைரவி உடனுறை சொர்ண பைரவர் அமர வைக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் மேல அகத்தீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு நேற்று மாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் செய்யப்பட்டு 108 கலசங்கள், 108 சங்குகள் வைக்கப்பட்டு காலபைரவன் மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. பின்னர் 48 வகையான திரவிய சகல அபிஷேகம் நடைபெற்று, கால பைரவருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பைரவாஷ்டமியையொட்டி சாமி, அம்மன் மற்றும் வடுக பைரவருக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பன்னிரு திருமுறைகள், பைரவ அஸ்ட்டோத்ரம், சிவபுராணம் ஓதப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.