ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 1282 வீடுகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 1282 வீடுகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். வீடுகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-27 18:12 GMT
குடியாத்தம்

குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 1,282 வீடுகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.. வீடுகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் கவுண்டன்ய மகாநதி ஆறு செல்கிறது 

இந்த ஆற்றங்கரை ஓரத்தில் நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு, என்.எஸ்.கே.நகர், நாராயணசாமி தோப்பு, கெங்கையம்மன் கோவில் ஆற்றங்கரையோரம், காமராஜர் பாலம் ஆற்றோரம், சுண்ணாம்பு பேட்டை ஆற்றோரம் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். 


இந்த வீடுகளில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது  ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. 

கடந்த வாரம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் வசித்துவந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கலெக்டர் உத்தரவு

வருங்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆற்றோரம் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து ஆற்றோரம் ஆக்கிரமித்துள்ள  1282 வீடுகளை இடித்து தள்ள கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து முதல்கட்டமாக கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளம் செல்லும் பாதைக்கு குறுக்கே கட்டியுள்ள வீடுகளை இடிக்கும் பணி நடந்தது.

 வேலூர் கோட்ட நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ரமேஷ் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் குணசீலன், விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் காவல்துறையினருடன் பொக்லைன் எந்திரங்களுடன் இன்று காலை ஆற்றில்  தண்ணீர் செல்லும் வழியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற முயற்சித்தனர்.

சாலை மறியல்

அப்போது அந்த வீடுகளில் வசித்த ஏராளமானோர் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வேண்டும் என வலியுறுத்தி திடீரென காமராஜர் பாலம் அருகே பெரியார் சிலை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் இரு பக்கத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, முருகன் உள்ளிட்டோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று ஓரிரு தினங்கள் காலஅவகாசம் பெற்றுத்தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்  நடைபெற்ற போது அந்த வழியாக  ஆம்புலன்ஸ் வந்தது. உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி தந்தனர்.

மேலும் செய்திகள்