உலகை அச்சுறுத்தும் புதுவகை கொரோனா; மராட்டியத்தில் புதிய கட்டுப்பாடுகள்;மீறினால் அபராதம்
உலகை அச்சுறுத்தும் புதுவகை கொரோனா எதிரொலியாக மராட்டியத்தில் புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்து உள்ளது.
மும்பை,
தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்கதாக கருதப்படும் ஒமிக்ரான் ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
உலகிற்கு மீண்டும் அச்சுறுத்தல்
உலகை மீண்டும் அச்சுறுத்தும் புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படுகிறது. உலக சுகாதார அமைப்பும் இந்த வகை கொரோனாவை கவலைக்குரிய திரிவாக வரிசைப்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவை தவிர்த்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது.
இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மராட்டிய அரசு நேற்று புதிய வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தடுப்பூசி கட்டாயம்
பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள் போன்றவை நடத்தப்படும் போது அதை ஏற்பாடு செய்தவர்கள், கலந்து கொள்பவர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் முழுமையாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். இதேபோல பொது மக்களுடன் தொடர்பில் இருக்கும் கடை, அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.
வணிக வளாக ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.
பஸ் பயணத்துக்கு...
ரெயில், பஸ் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் பொது மக்கள் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் மாநில அரசின் யூனிவர்சல் பாசை பதிவிறக்கம் செய்து பொது போக்குவரத்தில் பயணம் செய்யலாம்.
மேலும் மருத்துவ காரணங்களுக்கான தடுப்பூசி போட முடியாதவர்கள் அதற்குரிய சான்றிதழையும், 18 வயதுக்குள்பட்டவர்கள் பள்ளி, கல்லூரி அடையாள அட்டை போன்றவற்றை பயன்படுத்தி பயணம் செய்யலாம்.
வெளிமாநில பயணிகள்
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அல்லது 3 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை சான்றிதழுடன் வரவேண்டும். சர்வதேச பயணிகள் மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்.
பொது மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது போன்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீறினால் அபராதம்
மாநில அரசின் இந்த உத்தரவுகளை மீறும் தனிநபருக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்படும். இதேபோல வேலை செய்யும் தொழிலாளி, ஊழியர் போன்றவர்கள் விதி மீறியிருந்தால் குறிப்பிட்ட கடை அல்லது நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் விதிக்கப்படும். தொடர்ந்து அங்கு ஊழியர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ விதிமீறிலில் ஈடுபட்டால் அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும். இதேபோல ஒரு நிறுவனமே விதிமீறிலில் ஈடுபட்டால் ரூ.50 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும்.
டாக்சி, பஸ்களில் முககவசம் அணியாமல் இருத்தல் போன்ற விதிமீறலில் ஈடுபடும் பயணிகளுக்கும், அந்த வாகனங்களின் டிரைவர் மற்றும் உதவியாளருக்கும் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும்.
பஸ் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமுறை மீறல் நடந்தால் அந்த வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு மாநில அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.