தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தவித்த பொதுமக்கள் படகு மூலம் மீட்பு

தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தவித்த பொதுமக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.;

Update: 2021-11-27 17:45 GMT
தூத்துக்குடி:
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25-ந்தேதி கனமழை பெய்தது. இதனால் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக, முத்தம்மாள் காலனி, ரகுமத்நகர், தனசேகர்நகர், குறிஞ்சி நகர், ராஜீவ்நகர், கதிர்வேல் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, பிரையண்ட்நகர், சுப்பையா முதலியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிஞ்சி நகர் பகுதியில் மழைநீர் பாசிபிடித்து பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. இதனால் அங்கு சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ராம்நகர், ரகுமத்நகர் பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கி உள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து தவித்தனர். இதை அறிந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு வந்து, ரப்பர் படகு மூலம் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

மாநகரில் பல இடங்களில் 3 நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாமல் உள்ளது. சில பகுதிகளில் அந்த மழைநீரில் பாசி படர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.  அதே நேரத்தில், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின்மோட்டார்கள் மூலம் முழுமையாக தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கூடுதல் மின்மோட்டார்களை பயன்படுத்தி, தேங்கிய நீரை விரைவாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்