தொடர் கனமழை காரணமாக கொல்லிமலை சாலையில் திடீர் விரிசல் போக்குவரத்து பாதிப்பு
தொடர் கனமழை காரணமாக கொல்லிமலை சாலையில் திடீர் விரிசல் போக்குவரத்து பாதிப்பு
சேந்தமங்கலம்:
ெதாடர் மழை காரணமாக கொல்லிமலையில் உள்ள சாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொண்டை ஊசி வளைவு
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் 70-வது கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளது. இந்த நிலையில் தொடர் காரணமாக தேவனூர் நாடு ஊராட்சியில் உள்ள அரிப்பலாபட்டி கிராமத்தில் இருந்து விளாரம் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பு நீண்ட தூரத்திற்கு ஏற்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போக்குவரத்து நிறுத்தம்
இதையடுத்து வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் நெடுஞ்சாலை துறையினர் மூலம் சாலையை சரி செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரிப்பலாபட்டி கிராமத்திற்கு சென்று வந்த பஸ்கள் முன்னதாகவே திருப்பி விடப்பட்டது. இதனால் தேவனூர் நாடு பகுதியில் தற்போது பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.