மேம்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து கருத்தரங்கு

கோகோவில் உயர் விளைச்சலுக்கான மேம்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து மாவட்ட அளவிலான கருத்தரங்கு உடுமலையில் நடந்தது.

Update: 2021-11-27 17:23 GMT
உடுமலை
கோகோவில் உயர் விளைச்சலுக்கான மேம்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, மாவட்ட அளவிலான கருத்தரங்கு உடுமலையில் நடந்தது.
கோகோ சாகுபடி கருத்தரங்கு
கொச்சியில் உள்ள முந்திரி மற்றும் கோகோ வளர்ச்சி இயக்ககத்தின் நிதி உதவியுடன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், கோகோவில் உயர் விளைச்சலுக்கான மேம்பட்ட சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற கருத்தரங்கு உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட அளவில் நடந்த இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் சு.பிரணீதா முன்னிலை வகித்து பேசினார். 
அப்போது, கோகோ என்பது ‘தென்னை மரத்து தேவதை'. கொப்பரைத் தேங்காயின் விலை ஏற்றத்தாழ்வுகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் ஏற்படும் பொருளாதார சரிவை ஈடுகட்ட தென்னையில் கோகோ போன்ற ஊடு பயிர்களின் சாகுபடி இன்றியமையாதது. தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி, எதிர் உயிரிகள் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் மண், நீர் பரிசோதனை, ஆலோசனை ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். மேலும் ஆராய்ச்சி நிலையம் வழங்கும் தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் சான்றிதழ் பாடங்களை விவசாயிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
பேராசிரியர்கள்
வேளாண் துறையின் உடுமலை வட்டார வேளாண் அலுவலர் அமீரா, தோட்டக்கலைத்துறை துணை அலுவலர் சிவானந்தம், துணை வேளாண்  அலுவலர் கோவிந்தராஜன், உதவிப் பேராசிரியர்கள் பெ.சிவகுமார்,  சி.சுதாலட்சுமி, ப.லதா, ப.வினோத்குமார், பேராசிரியர் ப.மீனா ஆகியோர் பேசினார்கள். முன்னதாக ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் ப.லதா வரவேற்று பேசினார். முடிவில் ப.மீனா நன்றி கூறினார்.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய வேளாண் மேற்பார்வையாளர் கி.சரவணக்குமார் செய்திருந்தார். இந்த கருத்தரங்கில் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளைச்சேர்ந்த தென்னை சாகுபடியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்