தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கனிமொழி எம்.பி.-அமைச்சர் ஆய்வு
தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கனிமொழி எம்.பி.-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெளியேறுவதற்கு வழியின்றி தேங்கி உள்ளது.
இந்நிலையில் மழைநீர் சூழ்ந்துள்ள தூத்துக்குடி குமரன் நகர், ஹவுசிங் போர்டு காலனி, காமராஜர் நகர், முத்தம்மாள் காலனி, ராம்நகர், ரகுமத் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு தேங்கி கிடக்கும் மழைநீரை மின்மோட்டார்கள் மூலமாக அகற்றும் பணிகளை பார்வையிட்ட அவர்கள், மழைநீரை விரைவாக வெளியேற்றிட மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர் அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அவர்களிடம் விரைவாக மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோருடன் மழைநீரை வெளியேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினர். ஆய்வின்போது, சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் கண்ண பிரான், தாசில்தார் ஜஸ்டின் செல்லதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.