டாஸ்மாக் கடை ஊழியரிடம் ரூ2 லட்சம் பறிப்பு
சோளிங்கர் அருகே டாஸ்மாக் கடை ஊழியரிடம் போலீஸ் உடையில் வந்த 2 பேர் ரூ2 லட்சத்து 33 ஆயிரத்தை பறித்து சென்றனர்.
சோளிங்கர்
சோளிங்கர் அருகே டாஸ்மாக் கடை ஊழியரிடம் போலீஸ் உடையில் வந்த 2 பேர் ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்தை பறித்து சென்றனர்.
டாஸ்மாக் ஊழியர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ரெண்டாடி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் பாணாவரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல் இரவு கடையை மூடிவிட்டு விற்பனையான ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்தை மறுநாள் காலை வங்கியில் செலுத்துவதற்காக பையில் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ரெண்டாடியில் உள்ள தனது வீட்டிற்க்கு சென்றார்.
போலீஸ் உடையில்...
ரெண்டாடி பகுதியில் அவரின் வீட்டின் அருகே இரவு 10.30 மணியளவில் போலீஸ் உடையில் இருந்த 2 பேர் பழனியை வழிமறித்தனர்.
அவர்கள் வண்டியின் ஆர்.சி. புத்தகத்தை கேட்டனர். அதற்கு பழனி வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். அதை உடனடியாக எடுத்து வந்து காண்பிக்கும்படி கூறினர். பழனி வீட்டுக்குள் சென்று ஆர்.சி. புத்தகத்தை எடுத்து வந்து வெளியே வந்தார்.
அதற்குள் வண்டியில் மாட்டியிருந்த பையை கண் இமைக்கும் நேரத்தில் எடுத்துக்கொண்டு 2 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து பழனி சோளிங்கர் போலீஸ் நிலைத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகனேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படையினர் 2 பேரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.