அரளி பூ கிலோ ரூ400க்கு விற்பனை

திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு அரளி பூ வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் நேற்று பூவின் விலை கிடு கிடுவென உயர்ந்து ஒரு கிலோ அரளி பூ ரூ400க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2021-11-27 17:11 GMT
திருப்பூர்
திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு அரளி பூ வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் நேற்று பூவின் விலை கிடு,கிடுவென உயர்ந்து ஒரு கிலோ அரளி பூ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூ வரத்து குறைவு
திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல், சத்தியமங்கலம், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் மல்லிகைப்பூ, முல்லை, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் நடந்து வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் திருப்பூருக்கு பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக மார்க்கெட்டிற்கு ஒவ்வொரு நாளும் அனைத்து ரக பூக்களும் 12 டன் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது சுமார் 8 டன் பூக்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதனால் அனைத்து பூக்களின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அரளி பூ ரூ.400
மல்லிகைப்பூ கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வழக்கமாக அரளி பூ ஒவ்வொரு நாளும் சராசரியாக 3 டன் வரும் நிலையில் நேற்று சுமார் 500 கிலோ மட்டுமே வந்தது. இதனால் வழக்கமாக 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரளி பூ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
இதேபோல், முல்லை ரூ.400-க்கும், ஜாதிமல்லி ரூ.400,செவ்வந்தி ரூ.120 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டது. அரளி பூ விலை  உயர்ந்ததால் விற்பனை குறைவாக இருந்தது. பூக்களின் வரத்து அதிகரித்தால் தான் விற்பனை சூடுபிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்