ரூ.1 கோடி முந்திரியுடன் லாரி கடத்தல்; முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட 7 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து ரூ.1 கோடி முந்திரி பருப்புடன் லாரி கடத்தப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட 7 பேர் கைது

Update: 2021-11-27 17:11 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து ரூ.1 கோடி முந்திரி பருப்புடன் லாரி கடத்தப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

முந்திரி பருப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான முந்திரி ஆலையில் இருந்து நேற்று முன்தினம் 8 டன் எடை கொண்ட ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள முந்திரி பருப்பு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது.

இந்த லாரியை ஹரி என்பவர் ஓட்டி சென்றார். தூத்துக்குடியில் புதுக்கோட்டை அருகே லாரி வந்தபோது மர்ம நபர்கள் சிலர் லாரியை வழிமறித்தனர். பின்னர் டிரைவர் ஹரியை கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர்.

லாரி கடத்தல் 

பின்னர் டிரைவரை கீழே தள்ளிவிட்டு அவர்கள் முந்திரி பருப்பு பாரத்துடன் லாரியை கடத்தினர். கண்இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்து முடிந்தது. உடனடியாக நடந்த விவரங்களை டிரைவர் ஹரி, ஆலையின் மேலாளர் ஹரிஹரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் கடத்தப்பட்ட லாரியை தேடினர். எனினும் லாரியை கடத்தியவர்கள் அதில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.எஸ். கருவியை அகற்றி விட்டனர். இதனால் லாரி எங்கு இருக்கிறது? என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

கிடுக்கிப்பிடி விசாரணை

இதனிடையே, கடத்தப்பட்ட லாரி நாமக்கல் நோக்கி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். தூத்துக்குடி தனிப்படை போலீசாரும் நாமக்கல் வந்தனர். அவர்கள், உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் அருகே திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகப்படும்படி வந்த காரை தடுத்து நிறுத்தினர். காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் முந்திரி பருப்புடன் லாரியை கடத்திய கும்பல்தான் காரில் வந்தது தெரியவந்தது. 
அவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில், லாரியை ராசிபுரம் அருகே உள்ள மேட்டுக்காடு பகுதியில் நிறுத்தி இருந்ததையும் தெரிவித்தனர். உடனே போலீசார் லாரி நிறுத்தப்பட்டு இருந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு முந்திரி பருப்புடன் நின்ற கன்டெய்னர் லாரியை மீட்டனர். கடத்தல்காரர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் மகன்

இந்த கடத்தல் தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் (வயது 39), தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த சக்திவேல் மகன் விஷ்ணுபெருமாள் (26), தூத்துக்குடி மட்டக்கடை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் மனோகரன் (36), தூத்துக்குடி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கணபதி மகன் மாரிமுத்து (39), பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் தெருவைச் சேர்ந்த துரைகிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (26), முறப்பநாடு முத்துவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் செந்தில்முருகன் (35), முள்ளக்காடு நேசமணி நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் பாண்டி (21) என 7 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

கைதான 7 பேரையும், அவர்கள் வந்த காரையும், கடத்தப்பட்ட லாரியையும் மீட்டு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் லாரியை கடத்திய கடத்தல்காரர்களிடம் தூத்துக்குடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்