பண்ருட்டியில் சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு படுகாயமடைந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை
பண்ருட்டியில் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பண்ருட்டி,
பண்ருட்டி சாமியார் தர்கா பகுதியை சேர்ந்தவர் மதார்கான். இவரது மனைவி ஜெய்பூன் (வயது 45). மதார்கான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இதன்பின்னர், ஜெய்பூன் தனது மகள் பர்வீன்(24), பேரக்குழந்தைகள் சந்தீப் (7), தங்கபாண்டியன்(6) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது இரவு 10 மணியளவில் ஜெய்பூன் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் தூங்கிக்கொண்டு இருந்த ஜெய்பூன், பேரன் தங்கபாண்டியன் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். வீட்டில் வேறு இடத்தில் படுத்து தூங்கிய பர்வீன், மகன் சந்தீப் காயமின்றி உயிர் தப்பினர்.
பெண் சாவு
இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஜெய்பூன், தங்கபாண்டியன் ஆகியோரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்கு ஜெய்பூன் மட்டும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கால் முறிவு ஏற்பட்ட தங்கபாண்டியனுக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி அறிந்த பண்ருட்டி தாசில்தார் பிரகாஷ், போலீஸ் துணை சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
மற்றொரு சம்பவம்
விருத்தாசலம் மணலூர் புதிய காலனி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி காமாட்சி (45). இவர் நேற்று காலை தனது மகன் மற்றும் மகளுடன் வீட்டில் இருந்தார்.
விருத்தாசலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காமாட்சி வீட்டின் 4 பக்க சுவர்களும் ஈரப்பதம் ஆகி வலுவிழந்த நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது.
அப்போது குழந்தைகள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்த நிலையில், காமாட்சி சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் காமாட்சியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.