வழக்குகளை விரைவாக முடிக்க வக்கீல்கள் ஒத்துழைக்க வேண்டும்
வழக்குகளை விரைவாக முடிக்க வக்கீல்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் அறிவுறுத்தினார்.;
காரைக்கால், நவ.
வழக்குகளை விரைவாக முடிக்க வக்கீல்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இளந்திரையன் அறிவுறுத்தினார்.
சட்ட நாள் விழா
காரைக்கால் மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 72-வது சட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, காரைக்கால் மாவட்ட நீதிபதி எம்.சுரேஷ் விஸ்வநாத் தலைமை தாங்கினார். வக்கீல்கள் சங்க தலைவர் செல்வகணபதி வரவேற்றார். வக்கீல் செல்வமுத்துகுமரன் சட்டநாள் குறித்து பேசினார்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் சிறப்புரை அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:-
வக்கீல்கள் ஒத்துழைப்பு
ஒவ்வொரு வக்கீலும் எக்காரணம் கொண்டும் பொய்யான தகவலை கொண்டு நீதிமன்றத்தை வழிநடத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பின் மாண்புகளை நாம் காப்பாற்ற வேண்டும். சிறிய வழக்குகளாக இருந்தாலும், வக்கீல்களின் கடின உழைப்பு நீதிபதிகளின் மனதில் என்றும் இருக்கும். அனைத்து வழக்குகளும் விரைவாக முடிய வக்கீல்கள் ஒத்துழைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், காரைக்கால் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி செந்தமிழ்செல்வன், குடும்பநல நீதிபதி அல்லி, சார்பு நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத், உரிமையியல் நீதிபதி கிறிஸ்டியன் மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டனர். முடிவில் வக்கீல் சங்க செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.