வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 7100 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்
கனமழையால் நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 7100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது
விக்கிரவாண்டி
வீடூர் அணை
கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து நீர்வரத்து அதிகரித்து வீடூர் அணை நிரம்பி வழிந்தது. அதன் பின்னர் மழை குறைய தொடங்கியதால் நீர் வரத்து படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
உபரி நீர் வெளியேற்றம்
வீடூர் அணைநீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நேற்று அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 600 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 31 அடிக்கு நீர் மட்டம் இருப்பு உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 7 கதவுகளை திறந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 100 கன அடி உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையில் நீர்வரத்தை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் அய்யப்பன், சண்முகம், பாலாஜி, கார்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.