தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
சாய்ந்த மரம் அகற்றப்படுமா?
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் இருந்து பழனி செல்லும் வழியில் பழைய போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் நின்ற புளியமரம் பலத்த மழையால் சாய்ந்து விட்டது. இந்த புளிய மரத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமு, செம்பட்டி.
சுரங்கப்பாதையை திறக்க வேண்டும்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதை கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மூடப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வழக்கம் போல் ரெயில்கள் இயக்கப்படும் நிலையில், இதுவரை சுரங்கப்பாதை திறக்கப்படவில்லை. இதனால் பயணிகள் நடைமேடை பாலத்தில் ஏறி செல்ல வேண்டியது இருக்கிறது. எனவே சுரங்கப்பாதையை திறக்க வேண்டும். -பரமேஸ்வரன், திண்டுக்கல்.
சேதம் அடைந்த சாலை
நத்தம் தாலுகா சாத்தாம்பாடியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார்சாலை சேதம் அடைந்து விட்டது. சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட விரைவாக வரமுடியவில்லை. எனவே சேதம் அடைந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும். -சந்திரசேகரன், சாத்தாம்பாடி.
நாடகமேடைக்கு மின்இணைப்பு
ஆண்டிப்பட்டி ஒன்றியம் சண்முகசுந்தரபுரம் ஊராட்சி எஸ்.ரெங்கநாதபுரத்தில் நாடகமேடை கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. எனினும் இதுவரை நாடகமேடைக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் நாடகமேடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே நாடக மேடைக்கு மின்இணைப்பு வழங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -பாலகிருஷ்ணன், எஸ்.ரெங்கநாதபுரம்.
மழையால் வீடுகள் சேதம்
வேடசந்தூர் தாலுகா நல்லமனார்கோட்டை கிராமம் தொட்டணம்பட்டியில் முஸ்லிம்தெருவில் பலத்த மழையால் வீடுகள் சேதம் அடைந்து விட்டன. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் திண்டுக்கல்-கரூர் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைத்து, மழைநீர் ஊருக்குள் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முகமது அப்துல்லா, தொட்டணம்பட்டி.
தெருவிளக்கு வசதி அவசியம்
திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் பஞ்சம்பட்டி பிரிவில் தெருவிளக்கு வசதி இல்லை. இரவில் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து விடுவதால், பெண்கள் தனியாக நிற்க முடியவில்லை. தெருவிளக்கு இல்லாததால் ஒருசில நேரம் பஸ்களும் நிற்பதில்லை. எனவே பஞ்சம்பட்டி பிரிவில் தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும். அதேபோல் பஸ்கள் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், திண்டுக்கல்.