தர்மபுரி மாவட்டத்தில் 4 இடங்களில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 227 புதிய வீடுகள் கட்டும் பணி அமைச்சர் எம்ஆர்கேபன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்
தர்மபுரி மாவட்டத்தில் 4 இடங்களில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 227 புதிய வீடுகள் கட்டும் பணியை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கேபன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 4 இடங்களில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 227 புதிய வீடுகள் கட்டும் பணியை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
227 புதிய வீடுகள்
தர்மபுரி மாவட்டத்தில் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா, நாகாவதி அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா வரவேற்றார். செந்தில்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.
விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 227 புதிய வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பயனாளிகளுக்கு ரூ.62.66 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
4 இடங்களில் அடிக்கல்
தமிழக முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது நாகாவதி அணை முகாம், கெசர்குளி அணை முகாம், சின்னாறு அணை முகாம், அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய 4 இடங்களில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு ரூ.10.94 கோடி மதிப்பீட்டில் 227 புதிய வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி உள்ளோம்.
தர்மபுரி மாவட்டத்தில் 8 இடங்களில் அமைந்துள்ள புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மொத்தம் 2,417 நபர்கள் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு ரூ.2.25 கோடி பணக்கொடை வழங்கப்படுகிறது. விலையில்லா அரிசிக்காக ஒரு ஆண்டிற்கு ரூ.1.72 கோடி வழங்கப்படுகிறது. 60 மாணவ-மாணவிகளுக்கு விரைவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை என 223 நபர்களுக்கு தலா ரூ.1000 வீதம் மாதம்தோறும் ரூ.2 லட்சத்து 23 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
கடன் உதவி
மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 41 பெண்களுக்கு ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2,414 பேருக்கு ரூ.18 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் கோ-ஆப்டெக்ஸ் உயர்தர கைத்தறி துணிகள், 712 குடும்பங்களுக்கு ரூ.9 லட்சத்து 14 ஆயிரத்து 920 மதிப்பில் சேலம் உருக்காலை எவர்சில்வர் சமையல் பாத்திரங்கள், 184 குடும்பங்களுக்கு ரூ.5 லட்சத்து 27 ஆயிரத்து 528 மதிப்பில் கியாஸ் சிலிண்டர்கள், 40 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.30 லட்சம் கடன் உதவி ஆகியவை வழங்கப்படுகிறது.
அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க தேவையான இடங்களில் 486 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை அமைக்க ரூ.50 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட, சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மழைக்காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு லிப்ட் இரிகேஷன் திட்டத்தின் மூலம் நிரப்பிட ஆய்வு செய்து திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
600 டன் தக்காளி கொள்முதல்
தற்போது தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விலையை கட்டுப்படுத்த வெளிமாநிலங்களில் இருந்து உடனடியாக 600 டன் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக அரசின் கூட்டு பண்ணையக விற்பனையகம் மூலம் காய்கறிகள் தட்டுப்பாடின்றி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தர்மச்செல்வன், உதவி கலெக்டர் சித்ராவிஜயன், மகளிர் திட்ட இயக்குனர் பாபு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசன், உதவி திட்ட அலுவலர் அங்குசாமி, தாசில்தார்கள் அசோக்குமார், மனோகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் கார்த்திக் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.