பெங்களூருவில் ஒரே பள்ளியில் 33 குழந்தைகளுக்கு கொரோனா

பெங்களூருவில் தனியார் பள்ளியில் 33 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டு கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

Update: 2021-11-26 21:40 GMT
பெங்களூரு:

கொரோனா பாதிப்பு

  பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் ஒரு சர்வதேச தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. அதில் சுமார் 300 குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கு ஆசிரியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அந்த பள்ளியில் விடுதி வசதியும் உள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த குழந்தைகள் அங்கு தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளிகள் முழுமையாக செயல்பட அரசு அனுமதி அளித்ததை அடுத்து அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.

  கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுகாதாரத்துறை ஏற்கனவே வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதன்படியே அந்த தனியார் பள்ளிக்கு வரும் குழந்தைகள் முகக்கவசம் அணிந்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பள்ளியில் 2 குழந்தைகளுக்கு காய்ச்சல்-சளி தொந்தரவு ஏற்பட்டதை அடுத்து, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது.

33 பேருக்கு வைரஸ்

  அதைத்தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை வந்த பரிசோதனை முடிவில் 33 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் பலரின் பரிசோதனை முடிவு வரவேண்டி உள்ளது. அதில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள அனைத்து குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் உடல்நிலையை பெற்றோர் கண்காணித்து வருகிறார்கள். ஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், மற்றவர்கள் அறிகுறி இல்லாதவர்களாகவும் இருப்பதாக அந்த பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இந்த தகவலை அடுத்து பெங்களூரு நகர மாவட்ட கல்வி, சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பள்ளிக்கு நேரில் ஆய்வு செய்தனர். கொரோனா பரவலை அடுத்து அந்த பள்ளியில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் கற்பிப்பது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு குழந்தைகள்

  அந்த பள்ளியில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு குழந்தைகளும் படிக்கிறார்கள். அவர்களும் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. ஒரே பள்ளியில் 33 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டு கல்வி, சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  முன்னதாக கடந்த வாரம் ஒரு தனியார் பள்ளியில் 2 மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளியும் மூடப்பட்டது. அந்த பள்ளி வருகிற 29-ந் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்