பெங்களூருவில் நில நடுக்கமா?
பெங்களூருவில் திடீரென எழுந்த பயங்கர சத்தத்தால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கருதி மக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து பேரிடர் கண்காணிப்பு மையம் விளக்கம் அளித்துள்ளது.;
பெங்களூரு:
பயங்கர சத்தம்
கர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் சமீபகாலமாக கலபுரகி, விஜயாப்புரா, கொப்பல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது லேசான நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து நில அறிவியல் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் நேற்று பகலில் பயங்கர சத்தம் எழுந்தது.
அதாவது பகல் 11.50 மணியில் இருந்து 12.15 மணிக்குள் இந்த சத்தத்தை ராஜராஜேஸ்வரிநகர், கெங்கேரி, கக்கலிபுரா, ஹெம்மிகேபுரா உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த சத்தத்தை மக்கள் உணர்ந்தனர். இந்த சத்தம் அதிகபட்சமாக 2 வினாடிகள் நீடித்தது.
நிலநடுக்கமா?
இந்த சத்தம், நிலநடுக்கத்தால் ஏற்பட்டு இருக்குமோ என்று மக்கள் பீதியடைந்தனர். பயங்கர சத்தம் மட்டுமின்றி வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள், மின் விசிறிகளும் லேசாக அதிர்ந்துள்ளது.
சத்தத்தை உணர்ந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதேபோல் ராமநகர், மண்டியா, ஆனேக்கல் போன்ற பகுதிகளிலும் இந்த பயங்கர சத்தத்தை மக்கள் உணர்ந்தனர்.
வெளியே ஓடி வந்தோம்
இந்த சத்தத்தை உணர்ந்த ராஜராஜேஸ்வரிநகரை சேர்ந்த சாய், அபர்ணா ஆகியோர் கூறியதாவது:-
இன்று (நேற்று) பகல் 12 மணியளவில் நாங்கள் வீட்டில் இருந்தோம். அந்த நேரத்தில் பயங்கர சத்தம் எழுந்தது. அப்போது எனது வீட்டில் இருக்கும் ஜன்னல் அதிர்ந்தது.
இது நிலநடுக்கமா? என்று தெரியவில்லை. இந்த சத்தத்தை கேட்டதும் நாங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தோம். அதன் பிறகு இந்த சத்தம் கேட்கவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதமும் இத்தகைய பயங்கர சத்தம் வந்தது. இந்த சத்தம் வருவது ஏன் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரிக்டர் அளவு பதிவாகவில்லை
இதுகுறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மைய இயக்குனர் சி.வி.ராமன் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
பெங்களூருவில் ஹெம்மிகேபுரா, கெங்கேரி, ஞானபாரதி, ராஜராஜேஸ்வரிநகர், கக்கலிபுரா ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் இன்று(நேற்று) பகலில் 11.50 மணியில் இருந்து 12.15 மணிக்குள் அதிர்வுடன் கூடிய பயங்கர சத்தத்தை உணர்ந்தனர். இதையடுத்து எங்கள் நில அதிர்வு பதிவு மையத்தில் உள்ள ரிக்டர் அளவுகோலில் ஆய்வு செய்தோம். அதில் நில நடுக்கம் ஏற்பட்டதாக எதுவும் பதிவாகவில்லை.
இவ்வாறு சி.வி.ராமன் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானி விளக்கம்
ெபங்களூருவில் ேநற்று பயங்கர சத்தம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து புவியியல் விஞ்ஞானி அசோக் அஞ்சகி கூறுகையில், ‘‘பூமிக்கு அடியில் தட்டுகள் இருக்கின்றன. அவை எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும். அந்த தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது இத்தகைய பயங்கர சத்தம் வரும். அதனால் இன்று (நேற்று) மக்கள் உணர்ந்த அந்த சத்தம், இவ்வாறான நிகழ்வால் ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் இன்று (நேற்று) கர்நாடகத்தை பொறுத்தவரை நிலநடுக்கம் ஏற்படவில்லை.
புயல் ஏற்படுவது, மழை பெய்வது, பலத்த காற்று வீசுவது, சுனாமி ஏற்படுவது போல் தான் பூமிக்கு அடியில் இருக்கும் தட்டுகளின் செயல்பாடுகளும் இயற்கையின் ஒரு பாகமாக உள்ளது. இத்தகைய நிகழ்வு நடைபெறுவது இயல்பான ஒன்று தான். இதை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை’’ என்றார்.
நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்ைல
கர்நாடக அரசின் நில அறிவியல் துறை துணை இயக்குனர் லட்சுமியம்மா கூறுகையில், ‘‘பெங்களூருவில் பயங்கர சத்தம் வந்ததாக ஊடகங்கள் மூலம் அறிந்தோம். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை பேரிடர் மையத்திடம் நாங்கள் விவரங்களை கேட்டுள்ளோம். அந்த தகவல் வந்ததும் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வோம். பெங்களூருவை பொறுத்தவரையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை. மழை அதிகமாக பெய்த காரணத்தால் இந்த சத்தம் ஏற்பட்டு இருக்கலாம். அதனால் பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை’’ என்றார்.