புகார்பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை வேண்டும்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த திருவண்ணாமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்திராநகர் தரகுமலை மாதா ஆலயம் அருகில் சாலை வசதி இல்லை. இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது பெய்த மழையால் சாலையில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. அதில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?விஷ்ணு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஆபத்தான பள்ளம்
ராமநாதபுரம் நகர் பயோனியர் மருத்துவமனை அருகே முனியசாமி கோவில் தெற்கு தெருவில் சாலையில் சாக்கடை கால்வாய் சரிவர மூடப்படாமல் பள்ளமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்தும் நடக்கிறது. எனவே, ஆபத்தான இந்த பள்ளத்ைத மூட வேண்டும்.
அசோக்குமார், வண்ணாங்குண்டு.
வாகன ஓட்டிகள் அவதி
மதுரை காமராஜர் சாலையில் இருந்து வண்டியூர் செல்ல தெப்பக்குளம் பாலம் திரும்பும் இடத்திலும், யானைக்கல்லில் இருந்து வக்கீல் புது தெரு திரும்பும் இடத்திலும் சாலை மேடு, பள்ளமாக உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சிவா, மதுரை.
சேறும், சகதியுமான சாலை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மேலூர் சாலையில் இருந்து சக்கந்தி செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. தற்போது பெய்த மழையால் சாலை மிகவும் மோசமான நிலையில் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இந்த வழியில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராமமூர்த்தி, சிவகங்கை.
சுகாதார சீர்கேடு
மதுரை அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு பின்னால் சாக்கடை கழிவுகள், குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேஷ், மதுரை.
நாய்கள் அட்டகாசம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அய்யப்பன் காலனி பகுதியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நாய்கள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் தெருவில் செல்லவே அச்சம் அடைகின்றனர். நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
செல்வி, சிவகாசி.
கொசுத்தொல்லை
மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் சாலையில் கழிவுநீரும், மழைநீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும்.
கார்த்திகேயன், சக்கிமங்கலம்.
சாலையை அகலப்படுத்த வேண்டும்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கிருஷ்ணன் கோவில் அடுத்த குன்னூர் கிராமம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலையானது மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கூட ஒதுங்க முடியாத நிலை காணப்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே, இந்த சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
துரைராஜ், கிருஷ்ணன் கோவில்.
எரியாத தெருவிளக்குகள்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேலக்கால் மெயின்ரோட்டில் கோச்சடை பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். திருட்டு சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
ராஜன், கோச்சடை.
தார்சாலை தேவை
மதுரை சிம்மக்கல் வக்கீல் புது தெருவில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் போது வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்.
பிரேம்குமார், மதுரை.