நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் உயர்வு; 100 அடியை எட்டிய மணிமுத்தாறு அணை

பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அணை 100 அடியை எட்டியுள்ளது.

Update: 2021-11-26 20:52 GMT
நெல்லை:
பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் தற்போது 100 அடியை எட்டியுள்ளது.
அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு நிருபரிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் சராசரியாக இன்று (அதாவது நேற்று) காலை 8 மணி நிலவரப்படி 80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டை பகுதியில் 107 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம். மேலும் ஆற்றில் இருந்து செல்பி எடுக்கவும், ஆற்றின் குறுக்கே செல்லவும் வேண்டாம். நெல்லை மாவட்டத்தை பொருத்தவரையில் 4 முகாம்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 120 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவசர உதவி

மேலும் களக்காடு மற்றும் நாங்குநேரி பகுதியில் அதிக கனமழை காரணமாக 12 குளங்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. அதை அதிகாரிகள் சரி செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு தாலுகா பகுதிகளிலும் பொக்லைன் மற்றும் மணல் மூட்டைகள் தயாராக உள்ளது.தாழ்வான பகுதிகளில் எந்த இடத்தில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் அதை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மூலம் சரி செய்யப்பட்டு வருகிறது.
அவசர உதவிகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகின்ற 1077, 04622501012, 2501070 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தகவல் தெரிவிக்கலாம்

நெல்லை மாவட்டத்தில் மழை நீர் தேங்கி உள்ள குறித்த விபரங்களை பொது மக்களே நேரடையாக இணையதளத்தில் பதிவு செய்யும் முறை மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
எனவே தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் தங்கள் வசிப்பிடங்களில் மழை நீர் முறையாக வெளியேற்றப்படாமல் தேங்கியிருந்தால், https://nellaineervalam.in/waterlogging/ என்ற இணைய தளம் வழியாக பொது மக்களே நேரடையாக மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கலாம். பதிவு செய்யப்படும் விபரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை மேலப்பாளையத்தையும் டவுனையும் இணைக்கும் மேலநத்தம் பாலத்தை தொடும் விதமாக தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த பகுதியில் பொதுமக்கள் கூடி வெள்ளத்தை பார்வையிட வந்தனர். இதையொட்டி அங்கு போலீசார் பாலத்தின் மீது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாலத்தின் மீது நின்று வேடிக்கை பார்த்த கூட்டத்தை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் 7 வீடுகள் இடிந்தது

மூலைக்கரைப்பட்டி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி மாரிச்செல்வி (வயது 36). நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் சுகாதார பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.
நேற்று அதிகாலை இவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டுச் சுவர் வெளிப்புறமாக இடிந்து விழுந்தது. இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. 
மேலும் மூலைக்கரைப்பட்டி நாகல்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை (65), முனைஞ்சிப்பட்டியை சேர்ந்த அங்கப்பன் மகன் சுடலைக்கண்ணு (32), திருமலாபுரத்தைச் சேர்ந்த சுப்பையா மனைவி பத்மாவதி (85) ஆகியோருக்குச் சொந்தமான வீடுகளும் இடிந்து விழுந்தன.
இதேபோல் முக்கூடலில் 2 வீடுகளும், நெல்லை டவுனில் ஒரு வீடும் இடிந்து விழுந்தது.

குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

தொடர் மழை காரணமாக, நாங்குநேரி-ஏர்வாடி மெயின் ரோடு வீராங்குளம் கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இந்த குளத்தின் தண்ணீரானது நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா வழியாக உள்ள கால்வாய் வழியாக கடந்து வாகைகுளத்துக்கு சென்றது. இதற்கிடையே அதிக தண்ணீர் வரத்தால் கால்வாய் நிரம்பி, வீராங்குளம் கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
உடனே தாசில்தார் இசக்கிபாண்டி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அங்குள்ள சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் நாங்குநேரி-ஏர்வாடி இடையே செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இட்டமொழி

இதேபோன்று வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் பட்டஞ்சேரி குளம், விஜய அச்சம்பாடு குளம் ஆகியவை அடுத்தடுத்து நிரம்பி இட்டமொழி இலங்கையாடி குளத்துக்கு தண்ணீர் சென்றது.
இந்த நிலையில் விஜய அச்சம்பாடு குளத்தின் மடை அருகில் நேற்று திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. உடனே அப்பகுதி மக்கள் மற்றும் தேசிய ஊரக தொழிலாளர்கள் விரைந்து சென்று, மண் மூட்டைகளை அடுக்கி வைத்து கரையை சீரமைத்தனர்.

தரைப்பாலம் மூழ்கியது

தொடர்மழை காரணமாக, களக்காட்டில் உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய், பச்சையாறு மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. களக்காடு- சிதம்பராபுரம் இடையே தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தவாறு நாங்குநேரியான் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சிதம்பராபுரம் கிராமம் தீவாக மாறியது.
இதற்கிடையே நாங்குநேரியான் கால்வாயில் மூணாற்று பிரிவில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. களக்காடு புதுத்தெரு, வரதராஜ பெருமாள் கோவில் தெருக்களில் வெள்ளம் ஆறாக ஓடியது.
கீழ கருவேலங்குளத்தில் உப்பாற்று தரைப்பாலம் மூழ்கியதால் கீழப்பத்தை, மஞ்சுவிளை, மேல கருவேலங்குளத்துக்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். மேலும் சிங்கம்பத்து இந்திரா காலனியை வெள்ளம் சூழ்ந்தது. காடுவெட்டியில் பச்சையாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை வெள்ளம் அடித்து சென்றது.

மேலும் செய்திகள்