ஜவுளித்தொழிலை பாதுகாக்க சரக்கு மற்றும் சேவை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்- சங்க நிர்வாகிகள் வேண்டுகோள்
ஜவுளித்தொழிலை பாதுகாக்க சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு
ஜவுளித்தொழிலை பாதுகாக்க சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஜவுளித்தொழிலுக்கு வரி
ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கே.கலைச்செல்வன், செயலாளர் சிதம்பர சரவணன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம், கோவை மாவட்ட பகுதிகளில் ஜவுளித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. மத்திய-மாநில அரசுகளுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக ஜவுளித்தொழில் உள்ளது. மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை ஜவுளித்தொழிலுக்கு விதித்ததால் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் ஜவுளித்தொழில் 30 சதவீதம் நலிவடைந்து விட்டது. இந்த தொழில் செய்து வந்த சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் தொழிலைவிட்டு சென்று விட்டனர். பெரிய அளவிலான நிறுவனங்கள் மட்டுமே சற்று தாக்குப்பிடித்து வரும் நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதம் என்பதை மத்திய அரசு 12 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
வாழ்வாதாரம் இழப்பு
இப்படி வரி சதவீதத்தை மாற்றி அமைக்கும்போது ஜவுளி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. வியாபாரிகள் மட்டுமின்றி, ஜவுளித்தொழிலை நம்பி உள்ள பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
வரி விதிப்பு உயர்வானது பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் என்பதால் அவர்கள் ஜவுளி பொருட்கள் வாங்கும் திறன் குறையும். ஜவுளி உற்பத்தியாளர்கள் தயார் செய்யும் துணிகளை வாங்கி பயன்படுத்தும் ஏழை எளிய மக்களுக்கு கூடுதலாக 7 சதவீத வரி உயர்வு என்பது மிக மிக அதிக வரி விதிப்பாகும். எனவே ஜவுளித்தொழிலை பாதுகாக்க, சரக்கு மற்றும் சேவை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.