தரைப்பாலத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்; சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார்
அனுமன் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து. இதனை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார்.
பணகுடி:
பணகுடி அருகே அனுமன் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. மேலும் வீடுகளையும் வெள்ளம் சூழ்நதது. இதனை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார்.
அனுமன் நதியில் வெள்ளம்
நெல்லை மாவட்டம் பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அனுமன் நதி, குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பணகுடி அருகே கொமந்தான் கிராமத்துக்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கொமந்தான் கிராமத்துக்கு சென்ற சபாநாயகர் அப்பாவு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 60 குடும்பத்தினருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார். மேலும் அங்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று கூறினார்.
ரெகுநாதபுரத்தில் லட்சுமணன் என்பவரது வீடு மழையில் இடிந்ததால், அவருக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி மற்றும் அரிசி, மளிகை பொருட்களை சபாநாயகர் வழங்கினார்.
உயர்மட்ட பாலம்
இதேபோன்று பணகுடி வடக்கு சைதம்மாள்புரத்துக்கு செல்லும் வழியில் ஓடைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. இதனால் அங்குள்ள குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார். பின்னர் அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
தாசில்தார் ஏசுராஜன், ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, பணகுடி நகர செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பலர் உடன் சென்றனர்.