பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்
சேலம், நவ.27-
சேலத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து உயிர் இழந்த குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு புதிய வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கியாஸ் சிலிண்டர்
சேலம் கருங்கல்பட்டி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டமானது. இதில் 6 பேர் இறந்தனர். இந்த நிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு பழங்கள் வழங்கினார். பின்னர் சிகிச்சை முறைகள் குறித்து ஆஸ்பத்திரி டீன் வள்ளிசத்தியமூர்த்தி, கண்காணிப்பாளர் தனபால் ஆகியோரிடம் கேட்டு அறிந்தார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வீடு கட்டித்தர வேண்டும்
சேலம் மாநகரம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் விட்டல் தெருவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடுகள் தரை மட்டமாயின. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இடிந்த வீடுகளில் 47 பேர் வசித்து வந்துள்ளனர். இறந்த 6 பேர் தவிர மீதமுள்ளவர்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
விபத்தில் இறந்தவர்கள், காயம் பட்டவர்களுக்கு அரசு நிதி உதவி அறிவித்து உள்ளது. இருந்தாலும் வீடு இடிந்து தரைமட்டமானவர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு புதிய வீடு கட்டி தரவேண்டும். அல்லது வீடு கட்ட தேவையான நிதி உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் பங்க்.வெங்கடசாலம், எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணியம், ராஜமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் பாண்டியன், சண்முகம், பிரகாஷ், ஜெகதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.