பெண் குழந்தைகள் வீரமங்கைகளாக இருக்க வேண்டும்-அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேச்சு
பெண் குழந்தைகள் வீரமங்கைகளாக இருக்க வேண்டும் என நிமிர்ந்து நில், துணிந்து சொல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர்,
விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாணவிகளின் அச்ச உணர்வை போக்கும் வகையில் நிமிர்ந்து நில், துணிந்து சொல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
இதில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-
2 நாட்களில் ஆய்வு
கரூர் மாவட்டத்தில் 201 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் 26 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு மனதில் உள்ள தேவையில்லாத அச்சத்தைப் போக்கி அவர்களுக்கு உளவியல் ரீதியாக தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் உங்களை காக்க இருக்கிறது என்பதற்காக இந்த நிமிர்ந்து நில், துணிந்து சொல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் முன்மாதிரி மாவட்டமான கரூர் மாவட்டத்தில் தான் முதல் முதலாக இந்த மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்துகொண்டு உள்ளது. கலெக்டர், வருவாய் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அலுவலர்கள் 20 நபர்கள் ஒரு நாளைக்கு 5 பள்ளி என்ற வீதத்தில் 201 பள்ளிகளை 2 நாட்களில் ஆய்வு செய்ய உள்ளார்கள்.
வீரமங்கைகளாக...
பெண் குழந்தைகள் வீரமங்கைகளாக இருக்க வேண்டும். தவறு செய்பவர்கள்தான் தண்டிக்கப்பட வேண்டும். இனிவரும் காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்திடக்கூடாது என்ற அடிப்படையில் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும்.
முன்பெல்லாம் நாம் ஹீரோ பேனா வாங்கும் போது அதில் மேட் இன் சைனா என்று இருக்கும். பிறகு மேட் இன் இந்தியா என்று இருக்கும். இப்போது முதல்-அமைச்சரின் கனவு மேட் இன் தமிழ்நாடு. நம்மை பொறுத்தவரை மேட் இன் கரூர் அதை நோக்கித்தான் நாம் பயணித்துக்கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்
பள்ளி மாணவிகள் புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் கொண்ட விளம்பர பதாகைகளை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாணவிகளிடம் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், குழந்தை பாதுகாப்பு தொடர்பான தொலைபேசி எண் 1098. கல்வி வழிகாட்டி தொடர்பான தொலைபேசி எண் 14417. மாவட்ட நிர்வாகத்தின் வாட்ஸ்அப் எண் 89033 31098 உள்ளிட்ட 3 தொலைபேசிகளில் நீங்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த தொலைபேசி எண்கள் கொண்ட விளம்பர பதாகைகளை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒட்டப்பட்டு உள்ளன. உங்களுக்கு எந்த வகையில் எந்த தகவலாக இருந்தாலும் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யப்படும் என்றார்.