இலங்கை தமிழர்களுக்கு ரூ.10 கோடி நலத்திட்ட உதவி. அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

ஆம்பூர் பகுதியில் மழைவெள்ள பாதிப்புகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். முன்னதாக இலங்கை தமிழர்களுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2021-11-26 17:45 GMT
ஆம்பூர்

ஆம்பூர் பகுதியில் மழைவெள்ள பாதிப்புகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். முன்னதாக இலங்கை தமிழர்களுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவி

ஆம்பூரை அடுத்த மேல்சாணாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 949 இலங்கை தமிழர்களுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், நல்லதம்பி, கிரி, மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகுமார், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், துணை தலைவர் சாந்திசீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேஷ், துணைத் தலைவர் விஜய், ஊராட்சி செயலாளர் ரமேஷ் உடன் இருந்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு

ஆம்பூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏரிகள் நிரம்பியும், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் துத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள முகாம்களில் தங்கி உள்ளனர். இதந்நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று துத்திப்பட்டு ஊராட்சி பகுதியில் வெள்ளசேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழை வெள்ளத்தில் இருந்து நிரந்தர தீர்வு காண கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். மழை நின்றும் இதுவரை எங்கள் வீட்டிற்கு செல்லமுடியவில்லை. இதனால் எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு அமைச்சர், உங்கள் கோரிக்கை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்