நாமக்கல்லில் சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்; முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்
நாமக்கல்லில் நடந்த சட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:
விழிப்புணர்வு ஊர்வலம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி நாமக்கல் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடந்தது. நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குணசேகரன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இதில் சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் சட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக நடந்து சென்றனர்.
உறுதிமொழி
அதன் பிறகு இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சட்ட கல்லூரி மாணவர்கள், வக்கீல்கள், தன்னார்வலர்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியை ஏற்றனர். அதைத்தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஸ்ரீ வித்யா தொகுத்து வழங்கினார்.
மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன் சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட குடும்ப நல நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம், கூடுதல் சார்பு நீதிபதி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.