‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-26 17:16 GMT
புகாருக்கு உடனடி தீர்வு; 
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது 

தென்காசி மாவட்டம் கடையம் மெயின் ரோட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வீணாக சென்றது. இதுதொடர்பாக கடையத்தை சேர்ந்த திருக்குமரன் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் கடந்த 24-ந்தேதி வெளியானது. இதில் உடனடி தீர்வாக குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார். 

பஸ் சரிவர இயக்கப்படுமா?

வள்ளியூர் பணிமனையில் இருந்து 17 ‘எப்’ டவுன் பஸ் பணகுடி-கன்னன்குளம் வழித்தடத்தில் தினமும் 2 முறை இயக்கப்படுகிறது. இந்த பஸ் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்து வருகிறது. மேலும் மகளிருக்கான கட்டணமில்லா பஸ்சாகவும் இயக்கப்படுகிறது. ஆனால் டிரைவர், கண்டக்டர் தட்டுப்பாடு என்று கூறி பஸ் சரிவர இயக்கப்படாமல் அடிக்கடி ரத்து செய்யப்படுகிறது. எனவே, அந்த பஸ்சை சரிவர இயக்கினால் மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.
- சந்திரபால், கன்னன்குளம். 

பழமையான மரத்தால் அச்சம் 

வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் கிராமத்தில் சன்னி தெருவில் பழமையான மரம் ஒன்று உள்ளது. அதன் கிளைகள் ஒவ்வொன்றாக முறிந்து அருகில் உள்ள வீடுகளின் மீது விழுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்ேபாது மழை காலம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். ஆகையால் ஆபத்தான அந்த மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- சரவணன், அத்தாளநல்லூர். 

இரவு நேர பஸ்சை இயக்க வேண்டும் 

நெல்லையில் இருந்து கடையத்துக்கு இரவு நேர கடைசி பஸ் இரவு 10.20 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த பஸ் நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு பல மாதங்கள் ஆனபோதிலும், அந்த பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. ஆகையால் அதிகாரிகள் அந்த பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன். 
- நாராயணகுரு, வெள்ளிகுளம். 

பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?

குருவிகுளம் பஞ்சாயத்து யூனியன் அழகனேரி பஞ்சாயத்து துர்காநகர் காலனியில் உள்ள சாலை மற்றும் பாலம் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதன் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அந்த சாலை மற்றும் பாலம் மோசமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே, அவற்றை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?
- ரமேஷ்குமார், துர்காநகர் காலனி.

ஆபத்தான மின்கம்பம் 

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள், மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, ஆபத்தான அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 
- என்.டி.டெக்கான், கீழக்கலங்கல். 

* கடையம் யூனியன் ரவணசமுத்திரம் பஞ்சாயத்து பிள்ளையார் கோவில் தெருவில் அம்மன் கோவில் பின்புறம் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், மின்கம்பத்தில் விரிசல் விழுந்து, சாய்ந்தவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. ஆகையால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேகட்டுக் கொள்கிறேன். 
- நாகூர் சேட், ரவணசமுத்திரம்.

ஏ.டி.எம். மையம் வேண்டும் 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்தை சுற்றிலும் பல்வேறு கிராமங்கள் மற்றும் கல்லூரிகள் அமைந்து உள்ளன. தினமும் ஏராளமான பொதுமக்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், அங்கு ஏ.டி.எம். மையம் இல்லாததால் பணம் எடுப்பதற்கு கோவில்பட்டி டவுனுக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, புதிய பஸ் நிலையம் பகுதியில் ஏ.டி.எம். மையம் அமைத்தால் அது பொதுமக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.
- ஆனந்தராஜ், குளக்கட்டாக்குறிச்சி.

குண்டும், குழியுமான சாலை 

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் இருந்து செட்டிக்குளம் வரையிலும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சுமார் 3 கிலோ தூரமுள்ள இந்த சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறி விட்டது. தற்போது பெய்த மழையில் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. நெல்லையில் இருந்து மூலைக்கரைப்பட்டி வழியாக சாத்தான்குளம் செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்கிறது. எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
- அன்றோ சாம், நொச்சிகுளம்.

மேலும் செய்திகள்