வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவிப்பு

சிவகங்கை பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

Update: 2021-11-26 17:15 GMT
சிவகங்கை, 
சிவகங்கை பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
பலத்த மழை
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்தமழை பெய்தது.  பலத்த மழையால் சிவகங்கை நகரில் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. சிவகங்கை மேலூர் சாலையில் அமைந்துள்ள புதுவாழ்வு நகரில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. 
மேலும் தண்ணீர் வெளியேற வடிகால் எதுவும் இல்லாததால் 2 நாட்களாக குடியிருப்புகளில் வசித்துவரும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் கடும் அவதியுற்று வருகின்றனர். மேலும் மழை காலத்தின் போதெல்லாம் இதுபோல் தாங்கள் இன்னல்களை சந்தித்துவருவதாகவும் எனவே இந்த பகுதியில் நிரந்தர வடிகால் அமைத்து தண்ணீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
சுவர் இடிந்தது
மேலும் தொடர் மழை காரணமாக சிவகங்கை நகரின் மையப்பகுதியில் உள்ள தெப்பக்குளம் நிரம்பி மறுகால் சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தெப்பக் குளத்தின் சுவரில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
மேலும் பலத்தமழை காரணமாக சிங்கம்புணரி நகர் பகுதியில் மரம் விழுந்து 3 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதே போல ்சிவகங்கை பகுதியில் 6 பழுதடைந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டன. 15 இடங்களி்ல் புதிய மின் கம்பங்கள் நிறுவப் பட்டது. இளமனூர் பகுதியில் பெய்த கன மழையால் சாய்ந்த மின்கம்பம் சரி செய்யப்பட்டது என்று மின் வாரிய மேற் பார்வை பொறியாளர் சகாயராஜ் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்றுகாலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழைஅளவு மல்லிமீட்டரில் வருமாறு:- சிவகங்கை-96 ,மானாமதுரை-17, இளையான்குடி-30 , திருப்புவனம்-114.60, தேவகோட்டை-45.20, காரைக்குடி -70, திருப்பத்தூர்-84, காளையார் கோவில்-43, சிங்கம்புணரி 139.60. மாவட்டத்தில் அதிக பட்சமாக சிங்கம்புணரியில் 139 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்