அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மீண்டும் சட்ட கல்லூரி தொடங்க வேண்டும் - ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மீண்டும் சட்ட கல்லூரி தொடங்க வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.;
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக டெக் பார்க் அரங்கில் டாக்டர் அம்பேத்கர் இருக்கை சார்பில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இதற்கு அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் தலைமை தாங்கினார். மொழியியல் புல முதல்வர் பேராசிரியர் முத்துராமன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், அண்ணாமலை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் அரசியலமைப்பு சாசன உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் உச்சநீதிமன்ற வக்கீல் பிரபாகரன், அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் புல முதல்வர் சீனிவாசன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் சவுந்தரராஜன், உதவி பேராசிரியர் ராதிகாராணி ஆகியோர் செய்திருந்தனர்.
பாராட்டு
இதையடுத்து ரவிக்குமார் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் மேற்கொண்ட முயற்சி காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு சட்ட நாள் விழா சிறப்பாக நடத்தப்பட்டது. ஆய்வறிஞர் கதிரேசனை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழக அரசு தேர்வு செய்தமைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். துணைவேந்தர் கதிரேசன் தலைமையில் இந்த பல்கலைக்கழகம் இழந்த புகழை மீட்டுத்தரும் என நம்புகிறோம். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே சட்டக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. கடந்த 1983-ம் ஆண்டில் சட்டக்கல்லூரி மூடப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் மீண்டும் சட்டக்கல்லூரியை தொடங்க துணைவேந்தர் கதிரேசன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பின் தங்கிய கடலூர் மாவட்ட மாணவர்கள் எளிதில் சட்ட கல்வியை பெற வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.