தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு வெலிங்டன், பெலாந்துறை, தொழுதூர் அணைக்கட்டுகளில் இருந்து தண்ணீர் திறப்பு
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பால் வெலிங்டன், பெலாந்துறை, தொழுதூர் அணைக்கட்டுகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 75 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணாடம்,
கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் ஆனைவாரி ஓடை, உப்பு ஓடை மற்றும் சின்னாறு வழியாக மழைநீர் பெண்ணாடம் வெள்ளாற்றில் கலந்தது. இதனால் வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெண்ணாடம் அடுத்துள்ள பெலாந்துறை அணைக்கட்டில் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வந்தது. இந்த நிலையில் நேற்று அணையின் முழு கொள்ளளவான 6 அடியும் நிரம்பியது. இதனால் அணைக்கட்டின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 17,550 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
17 மதகுகள்
இதனால் அணைக்கட்டில் உள்ள 17 மதகுகள் வழியாகவும் தண்ணீர் சீறிப்பாய்ந்து வெள்ளாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக சேத்தியாத்தோப்பில் உள்ள அணைக்கட்டின் நீர்மட்டமும் வேகமாக நிரம்பி வருகிறது.
இதற்கிடையே அணைக்கட்டில் இருந்து வெள்ளநீர் சீறிப்பாய்ந்து செல்வதை சுற்று வட்டார கிராம மக்கள் பெலாந்துறை அணைக்கட்டுக்கு வந்து ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.
தொழுதூர் அணைக்கட்டு
இதேபோல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை, கிருஷ்ணாபுரம், லாடபுரம், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் தொழுதூர் அணைக்கட்டிற்கு ஆறுகளின் வழியாக நீர்வரத்து இருந்தது. நேற்று அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெள்ளாற்றில் திறக்கப்பட்டது. இதனால் வெள்ளாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றின் கரையோரமுள்ள பெரங்கியம், அரங்கூர், வாகையூர், ஆக்கனூர், பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மேடான பகுதிக்கு செல்லுமாறும், பொதுமக்கள் வெள்ளாற்றை கடக்க வேண்டாம் எனவும் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது.
வெலிங்டன் ஏரி
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் ஏரிக்கு தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 29.72 அடியில் தற்போது 28 அடி தண்ணீர் உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2500 கனஅடி நீர் 10 கண் மதகு வழியாக ஓடைகள் மற்றும் பாசன வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுகிறது.
இதனால் புலிவலம்- திட்டக்குடி சாலையில் ஓடையின் குறுக்கே உள்ள தரைப்பாலம், சாத்தநத்தம்- நாவலூர் இடையிலான தரைப்பாலம் உள்பட 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதன் காரணமாக நாவலூர், புலிவலம், சாத்தநத்தம், பெருமுளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம்
இதற்கிடையே ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், புலிவலம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள், பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததில் சுமார் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த பருத்தி மற்றும் மக்காச்சோளம் தண்ணீரில் மூழ்கியது.
மேலும் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.