மயிலாடும் தாங்கல் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மயிலாடும் தாங்கல் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. ஒரு கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. நேற்று காலையிலும் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி, தாழ்வான பகுதியில் தேங்கியது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ரிஷிவந்தியத்தில் 95 மில்லி மீட்டரும், தியாகதுருகம்-80, கள்ளக்குறிச்சி-70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழை வெள்ளம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எஸ்.மலையனூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏமம், நத்தகாளி ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த விளைநிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிராமத்திற்குள் புகுந்த தண்ணீர்
மயிலாடு தாங்கல் ஏரி நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் உபரிநீர் செல்லக்கூடிய கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், தண்ணீர் கிராமத்திற்குள் புகுந்தது. அங்குள்ள அம்மன் கோவில் மற்றும் 30 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தெருக்களிலும் மழைவெள்ளம் ஆறுபோல் போல் ஓடியதால் கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
3 மாணவர்கள் காயம்
தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சி காலனியை சேர்ந்த பரிமலகாந்தி(வயது 45) என்பவரது கூரைவீட்டின் சுவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் அவரது மகள்கள் கார்த்திகா(19), லீனா(18), மகன் மகேஷ்(15) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதில் கார்த்திகா, அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டும், லீனா 12-ம் வகுப்பும், மகேஷ் (15) 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.