வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நாகை

விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழையால் நாகை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இரவு முழுவதும் தூக்கம் இன்றி பொதுமக்கள் தவித்தனர்.

Update: 2021-11-26 15:52 GMT
நாகப்பட்டினம்:
விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழையால் நாகை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இரவு முழுவதும் தூக்கம் இன்றி பொதுமக்கள் தவித்தனர்.
வெளுத்து வாங்கிய மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் தூரல் மழையாக பெய்தது. 
இதை தொடர்ந்து நள்ளிரவில் கனமழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய வெளுத்து வாங்கியது. இதனால் நாகை நகர் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
மேலும் நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட, புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், சால்ட் ரோடு, முதலாவது கடற்கரை சாலை, வ.உ.சி. சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.
குறிப்பாக தெத்தி சிவசக்தி நகர், சூர்யா நகர், நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை, அந்தணப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 
தூக்கம் இன்றி தவித்த பொதுமக்கள்
நாகை ஆரிய நாட்டு தெருவில் மழைநீர் இடுப்பளவு தேங்கியது. அங்குள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் அதனை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனால் இரவு முழுவதும் தூக்கம் இன்றி தவித்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரில் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் மிதந்தன. 
வீடுகளுக்குள் இடுப்பு அளவு தண்ணீர் புகுந்ததால் கடும் சிரமத்துடன் மக்கள் இரவு முழுவதையும் கழித்தனர். 
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகை கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழக மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் ஆரிய நாட்டு தெருவுக்கு சென்று அங்கு தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். என்ஜின் பொருத்திய டிராக்டர் மூலம் தேங்கி நின்ற தண்ணீரை உறிஞ்சி கால்வாயில் வடிய வைக்கும் பணி நடந்தது.
தொடர்ந்து 3 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாகை செல்லூர், பாலையூர், பெருங்கடம்பனூர், புலியூர், சிக்கல் உள்ளிட்ட பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 40 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீர் மூழ்கி உள்ளன. மழை காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுப்பட்டது.
உப்பு ஏற்றுமதி பாதிப்பு
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. கடந்த மாதம் பெய்த கனமழையால் பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. சேகரித்து வைத்திருந்த உப்பை பனை ஓலைகள், மற்றும் பிளாஸ்டிக் தார்ப்பாய் கொண்டு மூடி வைத்திருந்தனர். சேமித்து வைத்திருந்த உப்பு ஏற்றுமதி மட்டுமே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது வேதாரண்யம் பகுதியில் கனமழை பெய்து வருவதால் உப்பு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக உப்பள பகுதியில் உள்ள மண் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளதால் உப்பள பகுதிகளில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த உப்பை லாரியில் ஏற்ற முடியாமல் உற்பத்தியாளர்கள் அவதிப்படுகின்றனர். இங்கிருந்து தினமும் 50 முதல் 100 லாரிகள் மூலம் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும்.
மழை அளவு
நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8.30 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு :-
 நாகை 187, திருப்பூண்டி - 83, திருக்குவளை - 67, கோடியக்கரை 48 தலைஞாயிறு - 43, வேதாரண்யம் - 37.

மேலும் செய்திகள்