தினத்தந்தி புகார் ்பெட்டி
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை வசதி வேண்டும்
நாகை மாவட்டம் தெத்தி கிராமத்தில் உள்ள சிவசக்தி நகரில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மண் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மழைக்காலங்களில் மண்பாதை முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி மற்றும் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், தெத்தி கிராமம்.
சாலையில் தேங்கும் மழைநீர்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்த ஆய்குடி பகுதி பிள்ளைகேட் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் வடிகால் வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேங்கி கிடக்கும் மழைநீரால் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் பழுதாகி நின்றுவிடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-ஹாஜாஹலீமா, பொதக்குடி.
சுகாதார வளாக கட்டிடத்தை சூழ்ந்துள்ள கழிவுநீர்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்த கம்பன்கொல்லை காலனி தெருவில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக பொதுகழிவறை கட்டிடம் உள்ளது. இந்த சுகாதார வளாக கட்டிடம் தற்போது பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கிறது. குறிப்பாக கழிவறை கட்டிடத்தை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவறை கட்டிடத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவானந்தம், திருவாரூர்.
சேறும், சகதியுமான சாலை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவதானம் அருகே செந்தாமரைக்கண் பகுதியில் சாலை வசதி இல்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் மண்பாதையில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மழைக்காலங்களில் மண்பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், சேறும், சகதியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செந்தாமரைகண் பகுதியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பிரசன்னா, திருவாரூர்.
பஸ்சுக்குள் குடைபிடித்தபடி பயணம்
திருவாரூரில் இருந்து செருவாமணி பகுதிக்கு அரசு பஸ்களில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில அரசு பஸ்களின் மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதன்காரணமாக பயணிகள் இருக்கைகளில் குடைபிடித்தபடி அமர்ந்து பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி சேதமடைந்துள்ள பஸ்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், திருவாரூர்.
மின்விளக்குகள் ஒளிருமா?
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதி கல்லு பாலத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் வசதிக்காக மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. தற்போது பராமரிப்பின்றி மின்விளக்குகள் எரிவதில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் வழிப்பறியில் ஈடுபடும் அபாயம் உள்ளது. மேலும், இருள் சூழ்ந்த சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?
-வரதன், திருவாரூர்.