தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் ஆற்றில் குளிக்க செல்லக்கூடாது என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் ஆற்றில் குளிக்க செல்லக்கூடாது என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்
தூத்துக்குடி:
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் ஆற்றில் குளிக்க செல்லக்கூடாது என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தாமிரபரணியில் வெள்ளம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக ஏராளமான தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது. அதே போன்று அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் நேற்று காலையில் பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மதியத்துக்கு பிறகு அந்த தண்ணீர் 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு நேற்று இரவு வந்து சேர்ந்தது.
ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 17 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் கடலுக்கு சென்று கொண்டு இருந்தது. இதனுடன் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீரும் சேரும் போது வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும். இதனால் தூத்துக்குடி மாவட்ட பகுதியில் தாமிரபரணி ஆற்றில் மக்கள் ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குளிக்க வேண்டாம்
பாபநாசம், சேர்வலாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தூத்துக்குடி மாவட்டம் மருதூர் தடுப்பணையை வந்தடையும். பின்னர் அகரம், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், முக்காணி வழியாக புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் 25 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கும், நீந்துவதற்கும், மீன்பிடிப்பதற்கும் அல்லது வேறு எந்த வேலைக்கும் மக்கள் செல்ல வேண்டாம். தாமிரபரணி ஆற்றங்கரையோரம் பொழுதுபோக்குக்காகவோ, பார்வையிடுவதற்காகவோ பொதுமக்கள் அதிக அளவில் கூட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டு உள்ளது. வருவாய்துறை, போலீஸ் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் உள்ளூர் அளவில் தகுந்த எச்சரிக்கை விடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.