போலீஸ் பயிற்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

போலீஸ் பயிற்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Update: 2021-11-26 15:29 GMT

கோவை

கோடநாடு வழக்கு விசாரணை நடைபெறும் கோவை போலீஸ் பயிற்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

போலீஸ் பயிற்சி பள்ளி

கோவை பாலசுந்தரம் ரோட்டில் போலீஸ் பயிற்சி பள்ளி (பி.ஆர்.எஸ்.) மைதானம் உள்ளது. 

இங்கு போலீஸ் குடியிருப்புகள், ஆயுதப்படை வளாகம், துப்பாக்கி சுடும் பயிற்சி மையம், ஆயுத கிடங்கு என போலீஸ் துறை சம்பந்தப்பட்ட பல முக்கிய துறைகள் உள்ளன. 

இங்குள்ள போலீஸ் குடியிருப்பில் ஏராளமான போலீசார் தங்களது குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். மேலும் முக்கிய வழக்குகளில் தொடர்புடைய நபர்களை, 

இங்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்துவது வழக்கம்.

வெடிகுண்டு மிரட்டல்

நேற்று முன்தினம் கோடநாடு கொலை, கொள்ளை சம்பந்தமாக எஸ்டேட் மேலாளர் நடராஜனை போலீசார் இங்கு அழைத்து வந்து காலை முதல் மாலை வரை விசாரணை நடத்தினர். 

இங்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பும் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் கோவை மாநகர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது. 

அதில் பேசிய நபர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் கூறினார்.

சோதனை

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம், அங்கு உள்ள கட்டிடங்கள் அனைத்திலும் சோதனை நடத்தினர்.


இதில், அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனிடையே கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபர் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். 

தொழிலாளி கைது

இதில், கோவை புலியகுளத்தை சேர்ந்த தொழிலாளி மோகன்காந்தி (வயது 48) என்பவர் தனது செல்போன் எண்ணில் இருந்து பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

 இதையடுத்து போலீசார் மோகன்காந்தியை மடக்கி பிடித்து விசாரித்தனர். 

இதில், அவரது நெருங்கிய உறவினர் கோவை போலீசில் பணிபுரிவ தும், அவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மோகன்காந்தி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்