தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழையால் தரைப்பாலங்களை வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் கிரா ம மக்கள் அவதிக்குள்ளாகினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழையால் தரைப்பாலங்களை வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் கிரா ம மக்கள் அவதிக்குள்ளாகினர்
எட்டயபுரம்:
மாவட்டத்தில் பலத்த மழையால் தரைப்பாலங்களை வெள்ளம் மூழ்கடித்து செல்வதால் கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
தரைப்பாலம் மூழ்கியது
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள ஆர்.வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்வதற்கு தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சாலை வசதி உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் ஊருக்குள் செல்லவோ, வெளியே வரவோ முடியும்.
இந்த சாலையில் நீர்வரத்து ஓடையை கடப்பதற்காக ஒரு தரைப்பாலம் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்றும் மழை பெய்ததால், காட்டாற்று வெள்ளத்தால் ஓடையில் தண்ணீர் வரத்து அதிகரித்து தரைப்பாலம் முற்றிலுமாக முழ்கி உள்ளது.
கிராமமக்கள் பரிதவிப்பு
நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை வெள்ளம் பாய்ந்து ஓடியதால் கிராமமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் பரிதவித்தனர். மேலும் மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளும் கிராமத்துக்கு உள்ளே வர முடியாமல் மறுகரையில் நிற்கும் நிலை உள்ளது. நேற்று காலையில் சற்று தண்ணீர் குறைந்தாலும் இருசக்கர வாகனங்கள் கால்நடைகள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால் வேறு வழி இல்லாமல் பொதுமக்கள் ஆபத்தையும் உணராமல் தண்ணீரை கடந்து சென்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் தாசில்தார் சசிக்குமார் மற்றும் எட்டயபுரம் போலீசார் அங்கு சென்று ஊருக்குள் செல்ல முடியாமல் பரிதவித்த மக்களை சிந்தலக்கரையிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். ஓடையில் வெள்ளம் குறையும் வரை கிராம மக்கள் தரைப்பாலத்தை கடப்பதை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஏரல்
இதேபோல் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில் நேற்று மாலையில் ஏரல் தாமிரபரணி ஆற்று தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்துச் சென்றது. அப்போது தரைபாலத்தில் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறுத்தம்
குரும்பூர்-ஏரல் சாலையில் சேதுக்குவாய்த்தான் தரைமட்ட பாலத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். இந்தநிலையில் அந்த பாலத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் தண்ணீரில் சிக்கிக்கொண்டனர். அவரை பொதுமக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.