வெள்ளம் பாதித்த பகுதிகளை கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவிகள் வழங்கினர்
வெள்ளம் பாதித்த பகுதிகளை கனிமொழி எம்பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவிகள் வழங்கினர்;
ஆறுமுகநேரி:
வெள்ளம் பாதித்த பகுதிகளை கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவிகள் வழங்கினர்.
வீடுகளுக்குள் தண்ணீர்
கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாகவும் நேற்று முன்தினம் காலை 9.30 மணியிலிருந்து மாலை வரை விடாது பெய்த கனமழையின் காரணமாகவும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.
இதனால் தெற்கு ஆத்தூரில் நாடார் தெரு, பம்பையா காலனி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் சென்றதால் அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஒரு தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோன்று மழையால் பாதிக்கப்பட்ட காயல்பட்டினம் கொம்புத்துறை, மாட்டுகுளம் பகுதி மக்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிவாரண உதவி
இந்தநிலையில் நேற்று காலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழி எம்.பி., தமிழக மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி போன்ற நிவாரண உதவிகளை வழங்கினர்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டதுடன், விரைவாக மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
பேட்டி
பின்னர் கனிமொழி எம்.பி. கூறுகையில், தாமிரபரணி ஆற்றில் அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்படுவதாக தகவல் வந்துள்ளது. எனவே கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக எடுத்துள்ளது. அதேபோல ஆத்தூர், காயல்பட்டணம், ஆறுமுகநேரி, பகுதியில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளோம், என்றார்.
கலந்து கொண்டவர்கள்
அவர்களுடன் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ்சிங், தாசில்தார் சுவாமிநாதன், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருப்பசாமி, மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் ராமஜெயம், யூனியன் குழு தலைவர் ஜனகர், ஆத்தூர் நகர பொறுப்பாளர் முருகப்பெருமாள், வரன்டியவேல் கிராம பஞ்சாயத்து தலைவி ஜெயக்கொடி வசந்தி, மேல் ஆத்தூர் கிராம பஞ்சாயத்து துணை தலைவர் பக்கீர் முகைதீன், லிங்கராஜ், ஆழ்வார்திருநகரி ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயக்கொடி மற்றும் நகர பொறுப்பாளர் முருகப்பெருமாள், காயல்பட்டணம் நகர செயலாளர் முத்து முகம்மது, திருச்செந்தூர் எஸ்.ஏ.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குரும்பூர்
குரும்பூர் பகுதியில் மழை வெள்ளச்சேதம் ஏற்பட்ட பகுதிகளை நேற்று கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கமங்கலம் தரைமட்டபாலம், சேதுக்குவாய்த்தான் தரைமட்ட பாலம, கடம்பாகுளம் அதன் மதகுகள் ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டனர்.
அப்போது தமிழக உழவர் முன்னணி மாநில துணைத்தலைவர் தமிழ்மணி மற்றும் விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக சீர் செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வாய்க்காலை தூர்வாரி தரும்படியும், மறுகால் பாயும் இடத்தில் ஏற்பட்டு உடைப்பில் அதிக அளவில் மண் மூட்டைகளை அடுக்கி சீர் செய்து தரும்படியும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர். அவர்களுடன் ஏரல் தாசில்தார் கண்ணன், மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஜனகர், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சி) கருப்பசாமி மற்றும் விவசாய சங்கத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முத்தையாபுரம்
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. முத்தையாபுரம் அதன் சுற்றுப்பகுதிகளான குமாரசாமி நகர், தங்கமணி நகர், பண்ணை நகர் உள்ளிட்ட இடங்களில் தெருக்களில் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை நேற்று மாலை கனிமொழி எம்.பி. நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அந்தப்பகுதி மக்கள் கனிமொழி எம்.பி.யிடம், இந்த பகுதியில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மழைநீர் வடிந்து செல்ல வடிகால் வசதி தேவை என்றும் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை கேட்ட கனிமொழி எம்.பி. உடனடியாக தெருக்களில் தேங்கிய மழைநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விரைவில் வடிகால் வசதி செய்து தரப்படும், என்றும் கூறினார்.
அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. சண்முகையா உள்பட பலர் உடன் இருந்தனர்.