அதிக லாபம் தரும் சம்பங்கி பூ சாகுபடியில் விவசாயிகள்
அதிக லாபம் தரும் சம்பங்கி பூ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்
குடிமங்கலம்
குடிமங்கலம் பகுதியில் அதிக லாபம் தரும் சம்பங்கி பூ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பங்கி பூசாகுபடி
குடிமங்கலம் பகுதியில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் தென்னையில் ஊடுபயிராக சம்பங்கி சாகுபடி செய்யப்படுகிறது.
சம்பங்கிபூ சாகுபடி பல ஆண்டுகளுக்கு வருமானம் கொடுக்கக்கூடியது ஆண்டு முழுவதும் மகசூல் கிடைப்பதால் விலை ஏற்ற இறக்கங்கள் சமன் செய்யப்பட்டு உத்தரவாதமான லாபம் கிடைத்து விடும் அதனால் அண்மைக்காலமாக சம்பங்கி சாகுபடி செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கூடுதல் லாபம்
சம்பங்கி சாகுபடி குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது சம்பங்கியை எல்லாவகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம் என்பதால் விவசாயிகள் ஊடுபயிராக சம்பங்கி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஜூன், ஜூலை மாதங்கள் ஏற்றதாகும். சம்பங்கி மலர் மாலை கட்டுவதற்கும் வாசனை திரவியம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
சம்பங்கி நடவுக்கு ஒரு ஏக்கருக்கு 500 கிலோ வரை கிழங்கு தேவைப்படும். கிழங்குகள் குறைந்தது 25 முதல் 30 கிராம் எடை கொண்டதாக இருக்க வேண்டும். கிழங்குகளை எடுத்து 30 நாட்கள் கழித்து நடவு செய்ய வேண்டும்.
சம்பங்கி நடவு செய்து 95 நாட்களில் இருந்து அறுவடை செய்யலாம் வருடத்திற்கு ஒரு எக்டருக்கு 15 முதல் 18 டன்முதல் மகசூல் கொடுக்கும். சம்பங்கி பூ தொடர்ந்து மகசூல் கொடுக்கக்கூடியது என்பதாலும் தென்னை மரத்தில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம் என்பதாலும் மேலும் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.