வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
பலத்த மழை பெய்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
உடுமலை
உடுமலையில் பலத்த மழை பெய்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
பலத்த மழை
உடுமலையில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணிக்கு பிடித்த மழை நீண்ட நேரம் இடைவிடாமல் பெய்தது. இரவு பலத்தமழை கொட்டியது. இதனால் பொள்ளாச்சி சாலை, பழனிசாலை தளி சாலை, கொழுமம் சாலை கச்சேரி வீதி வ.உ.சி.வீதி சத்திரம் வீதி உள்ளிட்ட பல சாலைகளில் மழைத்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கொழுமம் சாலையில் பெருக்கெடுத்து வந்த மழைத் தண்ணீர் மற்றும் அங்குள்ள ரெயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்தில் பெருக்கெடுத்து வந்த மழைத்தண்ணீர் ஆகியவை அந்த பகுதியில் கோவிந்தசாமி லேஅவுட்டில் உள்ள குடியிருப்புகள் மற்றும் அந்த குடியிருப்புகளுக்கு முன்பு கொழுமம் சாலையில் உள்ள கடைகள் ஆகியவற்றுக்குள் புகுந்தது. அந்த பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது.
அதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மழை நின்ற பிறகு தண்ணீர் சிறிது, சிறிதாக வடியத்தொடங்கியது.
தூர்வார வேண்டும்
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் வடிந்து செல்வதற்கான பணிகளை மேற்கொண்டனர். அந்த பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைத்தண்ணீர்வராமல் பள்ளத்தில் செல்லும் வகையில் அங்குள்ள பள்ளத்தை தூர்வார வேண்டும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உடுமலையில் நேற்று காலை 7 மணிவரையிலான 24 மணி நேரத்தில் 54 மி.மீ மழை பதிவாகியிருந்தது.