நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் உறுதி

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2021-11-26 12:34 GMT
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது விவசாயிகள் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் டி.ஏ.பி., பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. வனச்சட்ட விதிகளுக்கு உட்பட்டு மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும். ஆனால், அனுமதிச்சீட்டு வழங்காமல் வனத்துறையினர் இழுத்தடிப்பதோடு, மாடு மேய்க்கும் விவசாயிகளை வனத்துறை ஊழியர்கள் அவமரியாதையாக நடத்துகின்றனர்.
அகமலை பகுதியில் சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கர் மலை விவசாய நிலங்கள் உள்ளன. பாதை வசதி மற்றும் வன விலங்குகள் தொல்லையால் விவசாயம் செய்ய முடியவில்லை. இந்த மலைக்கே உரிய சிறப்பான மலைவாழை, ஆரஞ்சு சாகுபடியை மேற்கொள்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. ஆரஞ்சு சாகுபடி முற்றிலும் கைவிட்டு போய்விட்டது. எனவே மலை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். அகமலைக்கு செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளதால் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு கூட மக்கள் செல்ல முடியாமல் உள்ளனர்.
ஆக்கிரமிப்புகள்
ஆண்டிப்பட்டி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், விவசாய நிலங்கள் பயன்பெறவும் முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அணைக்கரைப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, "நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் முக்கியமான 10 இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகள் முழு வீச்சில் நடக்கும். வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து மாவட்டத்தில் அனைத்து வரத்து வாய்க்கால்களும் முழுமையாக தூர்வாரப்படும். நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். இதற்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் வித்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஷ்ணுராம் மேத்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்