இலங்கை தமிழர்கள் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

ஆம்பூர் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.

Update: 2021-11-25 17:55 GMT
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.

புதிதாக இடம் தேர்வு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மின்னூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 65 குடும்பங்களை சேர்ந்த 250 பேர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தற்போது தமிழக அரசின் சார்பில் மின்னூர் காளிகாபுரம் பகுதியில் புதிதாக குடியிருப்புகள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அங்கு குடியிருப்புகள் கட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் புதிதாக தேர்வு செய்துள்ள இடம் போக்குவரத்து வசதி ஏதும் இல்லாத, பாதுகாப்பற்ற முறையில் உள்ளது எனவும், தற்போது உள்ள இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மலையடிவாரத்தில் உள்ளதால் அதற்கு பதில் வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தி வலியுறுத்தி வருகின்றனர்.

தர்ணா போராட்டம்

இந்தநிலையில் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு கலெக்டர் இல்லாததால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாற்று இடம் ஒதுக்கும் வரை இங்கு இருந்து செல்லமாட்டோம் என கூறினர்.

அவர்களிடம், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தி கலெக்டர் இல்லை, உங்கள் மனுக்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குகிறோம் என கூறினர். ஆனால் பொதுமக்கள் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து போராட்டம் நடந்தது. 

அதன்பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்