வைகை அணைக்கு நீர்வரத்து கிடு, கிடு உயர்வு

கொட்டித்தீர்த்த மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 4,757 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2021-11-25 16:12 GMT
ஆண்டிப்பட்டி:

 நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பிற்பகல் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

நேற்று காலை வினாடிக்கு 3,379 கனஅடி தண்ணீர் வைகை அணைக்கு வந்தது. அதன்பிறகு தண்ணீர் வரத்து கிடு கிடுவென உயர்ந்தது. மாலை 6.30 மணி அளவில் வினாடிக்கு 4,900 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. 

இதனையடுத்து அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 4,757 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

 பணியாளர்கள் கண்காணிப்பு

இந்தநிலையில் கனமழை எதிரொலியாக, வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இரவு நேரத்தில் அணையின் நீர்வரத்தை கண்காணிக்க, 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் வைகை அணையின் நீர் ஆதாரங்களாக திகழும் மூல வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு, சுருளியாறு, முல்லைப்பெரியாறு ஆகிய இடங்களில் நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தற்போது பெய்து வரும் மழையினால், நள்ளிரவில் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே வைகை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 71 அடி தண்ணீர்

இதுகுறித்து வைகை அணையின் உதவி செயற்பொறியாளர் செல்வம் கூறும்போது, தொடர்மழையால் அணைக்கு எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அதனை கையாள தயாராக இருக்கிறோம். 

தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 69.50 அடியாக உள்ளது. தேவைப்பட்டால் அணையில் 71 அடி வரையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். நீர்வரத்தை பொறுத்து, 71 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்து, மீதமுள்ள தண்ணீரை உபரியாக திறக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்