செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் பஸ்சை இயக்க பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அஞ்சூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனத்தின் பொருளுதவியுடன் ரூ.50-லட்சம் செலவில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டது. அதனை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த கட்டிடம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் 50 மாணவர்கள் அமர்ந்து பயிலும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
திறப்பு விழா முடிந்து வெளியே வந்த மாவட்ட கலெக்டரை சந்தித்த அந்த பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது ஊருக்கு பஸ் வசதி இல்லை எனவும், அதனால் ஆஸ்பத்திரி, மார்க்கெட் போன்றவற்றுக்கு செல்ல தனியார் வாகனங்களையே நம்பி உள்ளோம். செங்கல்பட்டில் இருந்து அஞ்சூர் வரை அரசு பஸ்சை இயக்க வேண்டும் எனவும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.