வேளச்சேரியில் ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் வேளச்சேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2021-11-24 07:01 GMT
ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி அன்பில் தர்மலிங்கம் சாலையை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி சங்கீதா (வயது 37). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சங்கீதா, வேளச்சேரியில் வீடுகளில் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். வேளச்சேரி 100 அடி சாலை அருகே சைக்களில் சாலையின் குறுக்கே கடந்து செல்ல முயன்றார். ஒரு பக்க சாலையை கடந்த அவர், மறுபக்க சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்தது. சங்கீதா நிற்பதை கவனிக்காமல் அதன் டிரைவர் பஸ்சை வலது புறமாக திருப்பினார்.

இதில் ஆம்னி பஸ் மோதியதால் சைக்கிகளுடன் சாலையில் விழுந்த சங்கீதா மீது பஸ்சின் முன்புற வலது பக்க சக்கரம் ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய சங்கீதா, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்த உடன் பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் குமார், உதவி கமிஷனர் குமாரவேல், கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று பலியான சங்கீதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஆம்னி பஸ் டிரைவரான உளுந்தூர்பேட்டையை சேர்ந்த புஷ்பராஜ் (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பஸ் சக்கரத்தில் சிக்கி சங்கீதா பலியான சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. நெஞ்சை பதபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்