விபத்தில் 2 பேர் காயம்; அரசு பஸ்சை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

பாவூர்சத்திரத்தில் விபத்தில் 2 பேர் காயம் அடைந்ததை தொடர்ந்து அரசு பஸ்சை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-23 20:34 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் விபத்தில் 2 பேர் காயம் அடைந்ததை தொடர்ந்து அரசு பஸ்சை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

4 வழிச்சாலை பணி

பாவூர்சத்திரத்தில் நெல்லை - தென்காசி சாலையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. 
இந்த நிலையில் தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி அந்த சாலை வழியாக நேற்று அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.  

2 பேர் காயம் 

அப்போது பாவூர்சத்திரத்தில் இருந்து மகிழ்வண்ணநாதபுரம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்த குருசாமிபுரம் இ.பி. காலனியை சேர்ந்த ஆசீர்வாதம் (வயது 65) என்பவர் மீது அரசு பஸ் மோதியது. இதில் அவர் லேசான காயம் அடைந்தார். 
அதேநேரம் எதிரே ஸ்கூட்டரில் வந்த பாவூர்சத்திரம் காமராஜர் நகரை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் தர்மராஜ் (35) மீதும் பஸ் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

முற்றுகை

இதற்கிடையே, சாலைப்பணிகள் நடைபெறும்போது அரசு பஸ்கள் வேகமாக வருவதால் இதுபோன்று விபத்துகள் நடப்பதாக கூறி, அந்த அரசு பஸ்ைச பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். அப்ேபாது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
டிரைவர் மீது வழக்கு

இதையடுத்து அரசு பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கி விடப்பட்டு வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய பஸ் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக, பஸ்சை ஓட்டி வந்த சுந்தரபாண்டியபுரம் ஊரைச் சேர்ந்த டிரைவர் ஈஸ்வரமூர்த்தி (56) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே நெல்லை- தென்காசி சாலையில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் அரசு பஸ்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இதில் அதிகாரிகள் தலையிட்டு அரசு பஸ்களுக்கு வேக கட்டுப்பாடு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்