மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
கார்த்திகை மாதத்தையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.
நெல்லை:
கார்த்திகை மாதத்தையொட்டி மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.
மேலப்பாளையம் சந்தை
நெல்லை மேலப்பாளையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று ஆடு, கோழி, மாடு விற்பனை செய்யக்கூடிய சந்தை நடந்து வருகிறது. இங்கு நெல்லை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடு, மாடுகளை விற்பனை செய்தும், வாங்கியும் செல்வார்கள். இதனால் இந்த சந்தையில் விற்பனை மும்முரமாக நடைபெறும்.
மேலும் சித்திரை, ஆடி, ஆவணி மாதங்களில் கோவில் கொடை விழாவுக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும். இதேபோல் ரம்ஜான், பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெறும்.
விற்பனை மந்தம்
இந்த நிலையில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள். குறிப்பாக முருக பக்தர்கள், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து வருவதால் அசைவ உணவை குறைத்துள்ளனர். இதனால் சந்தைகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் போன்றவை விற்பனை சரிந்துள்ளது.
மேலப்பாளையம் சந்தையில் நேற்று மிகக்குறைந்த அளவிலேயே வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். அவற்றை வாங்குவதற்கு வந்தவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. இதனால் நேற்று ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.
சேறும் சகதியுமாக...
மேலும் சந்தையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மோசமாக கிடக்கிறது. அங்குள்ள பாதுகாவலர் அறையில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.