கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்
கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயமானார்
கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் சதாம் நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 45). இவருக்கு சொந்தமான பைபர் நாட்டுப் படகில் இவரும், கோட்டைப்பட்டினம் புதிய வன்னிச்சியேந்தல் பகுதியை சேர்ந்த மணிமுத்து (40) என்பவரும் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இருவரும் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென்று வீசிய காற்றின் காரணமாக படகு கடலில் கவிழ்ந்தது.
இதில், கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு கணேசன் உயிர் தப்பினார். ஆனால், மணிமுத்து நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவரை கணேசன் நீண்டநேரம் தேடியும் கிடைக்கவில்லை.
கதி என்ன?
இதுகுறித்து தனது செல்போன் மூலம் சக மீனவர்களுக்கு கணேசன் தகவல் தெரிவித்தார். உடனே அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிமுத்துவை அப்பகுதியில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால், அன்று இரவு சோகத்துடன் கரை திரும்பினர்.
இந்தநிலையில் நேற்று காலை இரண்டு நாட்டுப் படகுகளில் மணிமுத்துவை தேடி மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மேலும், மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன், அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் விசைப்படகு மூலம் காணாமல் போன மீனவரை தேடி கடலுக்குள் சென்றனர்.
ஆனால், மீனவர் மணிமுத்துவை நீண்டநேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடலில் மூழ்கிய படகு மட்டும் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வரப்பட்டது. எங்கு தேடியும் மீனவர் மணிமுத்து கிடைக்காததால் அவரது கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. இதனால், அவரது உறவினர்களும், சக மீனவர்களும் சோகத்தில் உள்ளனர். கடலில் மூழ்கிய மீனவர் கரை திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.