விருதுநகரில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை

தொடர்மழை வரத்து குறைவினால் விருதுநகரில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2021-11-23 19:12 GMT
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் பருவமழை இன்னும் பயன் தரவில்லை. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் சோள பயிரினையே பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். சில இடங்களில் மட்டுமே நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
 காய்கறிகளை பொருத்தமட்டில் கிராமங்களிலிருந்து வெண்டைக்காய், கத்தரி, சீனி அவரைக்காய், புடலங்காய் சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சிறு வியாபாரிகள் நகரங்களுக்கு எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். விருதுநகரை பொருத்தமட்டில் பெரும்பாலான வியாபாரிகள் மதுரை காய்கறி மார்க்கெட்டில் இருந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கி வந்து தான் விற்பனை செய்கின்றனர். 
ரூ.90-க்கு விற்பனை 
விருதுநகர் மார்க்கெட்டிற்கு  ஆந்திரா மற்றும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து தக்காளி விற்பனைக்காக வருகிறது. 15 கிலோ தக்காளி கொண்ட பெட்டி கடந்த மாதம் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது.  ஆனால் தற்போது ரூ.1,080 வரை விற்பனை ஆகிறது. 15 கிலோ பெட்டியில் குறைந்தது 2 கிலோ சேதமடைந்து விடும் நிலையில் சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனையாகி வருகிறது. வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்து வரும் நாட்களிலும் தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். 
விலை விவரம் 
அதேபோல நேற்று விருதுநகரில் காய்கறிகளின் விலை வருமாறு (1 கிலோ):- 
 தக்காளி-90, கத்தரிக்காய்-50, வெண்டைக்காய்-40, அவரைக்காய்-70, கேரட்-40, முட்டைக்கோஸ்-35, பீன்ஸ்-70, பட்டாணி-250, பட்டர் பீன்ஸ்-200, சோயா பீன்ஸ்-140, முருங்கைக்காய்-70, பூசணிக்காய்-20, காலிபிளவர்-70.
காய்கறி விலை உயர்வு குறித்து விருதுநகரை சேர்ந்த வியாபாரி நாகமணி கூறுகையில், பெரும்பாலான வியாபாரிகள் மதுரை மார்க்கெட்டிலிருந்து தான் காய்கறிகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்கின்றோம். தற்போது மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் வழக்கத்தை விட விலை அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 
தக்காளியை தவிர்க்கும் இல்லத்தரசிகள்
விருதுநகரில் நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு கடைகளில் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
வீடுகளில் சாம்பார், புளி குழம்பு, ரசம் என எந்த குழம்பு வைப்பதாக இருந்தாலும் தக்காளி அவசியம் தேவை. இதனால் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதால் இல்லத்தரசிகள் மார்க்கெட்டுக்கு சென்றாலும் தக்காளியை வாங்காமல் தவிர்த்து வீடுகளுக்கு திரும்புகிற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்மழை வரத்து குறைவினால் விருதுநகரில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்