மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.;

Update: 2021-11-23 18:27 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மத்திய குழு ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், சேதங்களை மதிப்பீடு செய்யவும் மத்திய நிதி அமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய நீர்வளத்துறை இயக்குனர் ஆர்.தங்கமணி, மத்திய எரிசக்தி அமைச்சக உதவி இயக்குனர் பாவியா பாண்டெ ஆகியோர் அடங்கிய  மத்திய குழுவினர் நேற்று மாலை ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் விருந்தினர் மாளிகைக்கு வந்திருந்தனர். அவர்களுடன் மத்திய வழிநடத்துதல் கண்காணிப்பு மற்றும் வருவாய், பேரிடர் வேளாண்மை துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்தும் வந்திருந்தார்.

அங்கு பல்வேறு துறைகளின் கீழ் பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டனர். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இக்குழுவினருக்கு பாதிப்புகள் குறித்த விவரங்களை விவரித்தார். அப்போது ஜெகத்ரட்சகன் எம்பி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும், பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

ஓச்சேரி

தொடர்ந்து நெமிலி வட்டம் ஓச்சேரி அடுத்த மேலபுலம்புதூர் பகுதியில் 18.2 ஏக்கர் நெல் பயிர் சேதமடைந்ததை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
இந்த ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வேலாயுதம், தாசில்தார் ரவி மற்றும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், வேளாண் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மாவட்ட நிர்வாகம் அறிக்கை

இதனிடையே சேதவிவரங்கள் குறித்து மத்திய குழுவிடம் சேதவிவரங்களை மாவட்ட நிர்வாகம் அறிக்கையாக அளித்துள்ளது. அதில், ‘‘வேளாண்மை துறை சேதங்களுக்கு ரூ.3 கோடியே 29 லட்சம், தோட்டக்கலைத் துறைக்கு ரூ.52 லட்சம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறைக்கு ரூ.11 கோடியே 8 லட்சம், நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.5 கோடியே 4 லட்சம், மின்வாரியத்திற்கு ரூ.5 கோடியே 38 லட்சம், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.2 கோடியே 18 லட்சம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.1 கோடி, பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் மருத்துவ கட்டிடங்கள் ரூ.1 கோடியே 27 லட்சம், வருவாய்த் துறைக்கு ரூ.78 லட்சம் என மொத்தமாக ரூ.29 கோடியே 44 லட்சம் சேதங்கள் ஏற்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்