வேலூரில் தகராறில் ஈடுபட்ட வாலிபர் மர்மச்சாவு

வேலூரில் தகராறில் ஈடுபட்ட வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-11-23 18:00 GMT
வேலூர்

வேலூரில் தகராறில் ஈடுபட்ட வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகராறு

வேலூர் கே.கே.நகர், முள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது 55). மேல்மொணவூரில் உள்ள கோ-ஆப்டெக்டெக்ஸில் கூலிவேலை செய்து வருகிறார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2-வது மகன் சரண்ராஜ் (21) கூலித்தொழிலாளி. மேலும் சுபநிகழ்ச்சிகளுக்கு மேளம் அடிக்கும் வேலையும் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் அவருக்கும், அதேபகுதியை சேர்ந்த குண்டு என்ற வில்சன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

அப்போது ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இந்தநிலையில் மதியம் 12.30 மணி அளவில் அந்த பகுதியில் சாலையோரம் சரண்ராஜ் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

மர்மச்சாவு

அங்கு அவரை டாக்டர்கள் சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை மேற்கொண்டார். மேலும் சரண்ராஜ் உடலை போலீசார் ஆய்வு செய்து, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சரண்ராஜின் உடலில் எந்தவித காயங்களும் இல்லை.  பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான் சரண்ராஜ் மரணத்தின் மர்மம் தெரியவரும். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்