ஆம்பூர் நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

ஆம்பூரில் சாலையை சீரமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-23 17:59 GMT
ஆம்பூர்

ஆம்பூரில் சாலையை சீரமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குண்டும் குழியுமான சாலை

ஆம்பூர் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள வி.ஏ.கரீம் சாலை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வரக்கூடிய பிரதான சாலையாகும். இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை மற்றும் பஜார் பகுதியை இணைக்கும் முக்கிய சாலை என்பதாலும், ஷூ விற்பனை அதிகமாக விற்பனை செய்யப்படும் கடைகள் இந்த சாலையில் அதிகமாக உள்ளன.
இதனால் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஷூ மற்றும் அதன் உதிரி பாகங்கள் வாங்கிச் செல்வதற்கு வந்து செல்லக்கூடிய முக்கிய சாலையாக விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி வாகனங்களில் செல்வோர் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.

சாலை மறியல்

இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சாலைகளை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதனை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்